பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு இல்லை – விசேட வைத்தியர்கள் சங்கம்.!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (04) ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு தங்களது ஆதரவு இல்லையென விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விசேட வைத்தியர்கள் வழமை போன்று தங்களது கடமைகளை முன்னெடுப்பதுடன், வைத்தியசாலைகளின் விசேட மருத்துவ சேவைகள் தடையின்றி தொடரும் என சங்கத்தின் செயலாளர் வைத்திய நிபுணர் ஆர். ஞானசேகரம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேலதிக பயிற்சி பெறும் விசேட வைத்தியர்களும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 2,300 விசேட வைத்தியர்கள் சங்கத்தில் உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வழமைபோல் பணியில் ஈடுபடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் உயிரை பணையமாக வைத்து போராட்டத்தில் ஈடுபடுவது தங்களதுகொள்கையல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, வைத்தியர்களின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களில் அரசியல் தலையீடு இடம்பெறுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது.
இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டம் எப்போது நிறைவடையும் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்பு கடந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஒரு நாள் அடையாளப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.