உந்துருளியை திருடிய இருவர் சிக்கினர்.!
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் உற்சவ கால பாதுகாப்பு நிலையத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியை திருடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் இவ்வாறு உந்துருளியின் வயர்களை துண்டித்து உந்துருளியை களவாடி கிளிநொச்சி வரை கொண்டு சென்றுள்ளனர்.
வீதியில் இடை நடுவே உந்துருளி இயங்க மறுத்த நிலையில் வீதியில் நின்ற சமயம் உந்துருளி உரிமையாளரினால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக தருமபுரம் பொலிஸாரால் விரைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் கிளிநொச்சி பகுதியில் வைத்து உந்துருளி கைப்பற்றப்பட்டதோடு 2 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த சந்தேக நபர்களையும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.