குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக இடை நிறுத்தம்.!
மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் இன்று மாலையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சந்தேகிக்கப்பட்ட இடத்தில் சுமார் 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்டபோதும், மனித உடல் எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால், தோண்டப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.மேலும், அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் சந்தேகிக்கப்படும் பிற இடங்கள் முதலில் ஸ்கேன் செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பு – கல்முனை வீதியில் பயணம் செய்த 170 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் குருக்கள்மடம் கடற்கரை அருகில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.