தேசிய பூங்காவை ஆதரித்தது சுமந்திரன்தான்- முரளிதரன் குற்றச்சாட்டு!
வடமராட்சி கிழக்கு பகுதியில் மக்களின் காணிகள் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அந்நேரத்தில் ஆதரவு அளித்ததே இன்றைய மக்களின் துன்பங்களுக்கு காரணம் என சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், கட்டைக்காடு, கேவில், சுண்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களின் காணிகளை வனஜீவராசி திணைக்களம் தேசிய பூங்கா என்ற பெயரில் கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும், இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தப் பகுதிகளை தேசிய பூங்காவாக நிலைநிறுத்தும் நோக்கில் யானைகளை கொண்டு வந்து மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற கருத்தரங்கில்தேசிய பூங்காவுக்கு ஆதரவான நிலைப்பாடு முன்வைக்கப்பட்டதாகவும், அப்போது அதனை தாம் உள்ளிட்ட சிலர் எதிர்த்ததாகவும் முரளிதரன் குறிப்பிட்டார்.
தேசிய பூங்கா அறிவிக்கப்பட்டால் அந்தப் பகுதிகளில் மக்கள் குடியிருப்பது சாத்தியமில்லை என்பதையும் அப்போது எடுத்துக்கூறியிருந்ததாக அவர் தெரிவித்தார்.அத்துடன், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் பெரும்பான்மை உள்ள நிலையில், மக்களின் காணிகளை தேசிய பூங்காவாக அறிவித்த வர்த்தமானியை நீக்க முடியுமா என்பதையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.