ஹோர்முஸ் நெருக்கடியால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறிய இலங்கை.!
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடைகள், உலக பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.உலகளாவிய விவசாய உரத் தேவைகளில் முக்கியமான யூரியா, பொட்டாசியம், அம்மோனியா மற்றும் போஸ்பேட் ஆகியவற்றின் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றது.
இதனால் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு, எதிர்வரும் காலங்களில் பயிர் விளைச்சல் குறையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வட அரைக்கோளத்தில் பெரும்போக செய்கை நடைபெறும் நிலையில், இந்த தடைகள் உலக உணவுப் பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
ஜெர்மனியில் அமைந்துள்ள கீல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளதரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2 சதவீதம் வரை மற்றும் பழங்கள், காய்கறிகள் 5.2 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்.
மேலும், உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஜாம்பியா முதலிடத்திலும், இலங்கை இரண்டாம் இடத்திலும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை சுமார் 15.3 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.இந்நிலைமை தொடர்ந்தால், உலகளாவிய உணவுப் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு தீவிரமடையும் அபாயம் நிலவுகிறது.