சபாநாயகருக்காக ஆஜராகாத சட்டமா அதிபர்! நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்!
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அவர்களின் பணி இடைநிறுத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள சபாநாயகர் சார்பில் சட்டமா அதிபர் முன்னிலையாகாத நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகேஸ்வரன் நீதிமன்றில் முன்னிலையானார்.
சட்டவிரோதமான முறையில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சமிந்த குலரத்னவின் பணி இடைநிறுத்தப்பட்டதை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, இந்த வழக்கை சமரசமாக தீர்க்கும் வாய்ப்பு இருப்பதாக சபாநாயகர் தரப்பு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்தஅபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ முன்னிலையில் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, சபாநாயகர் சார்பில் தாம் முன்னிலையாகமாட்டோம் என அறிவித்தார்.
மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, மனுவின் விடயங்களை உறுதிப்படுத்த திகதி வழங்குமாறு கோரியதையடுத்து, ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பிரதிவாதி தரப்பிற்கு உத்தரவிட்டது.இந்த வழக்கில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உள்ளிட்ட நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.