ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் .!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக, பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் – இஸ்ரேல் மோதலின் விளைவாக ஹார்முஸ் நீரிணை கடந்த மூன்று வாரங்களாக மூடப்பட்டுள்ளதால், உலகளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை அதிகரித்துள்ளது.
இதனால் விவசாய உற்பத்திச் செலவுகள் உயர்ந்து, உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் டோம் பிராட்ஷா வழங்கிய தகவலின்படி, அடுத்த ஆறு வாரங்களில் தக்காளி, வெள்ளரிக்காய், மிளகாய் போன்ற பசுமைக்குடில் பயிர்களின் விலை உயரக்கூடும்.
மேலும், அடுத்த 3 முதல் 6 மாதங்களில் பால் மற்றும் ஏனைய விவசாயப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. விவசாய இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் ‘சிவப்பு டீசல்’ விலை உயர்வுவிவசாயிகளிடையே கவலைக்குரியதாக உள்ளது.
இந்நிலையில், வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் எரிசக்தி நெருக்கடி தொடர்பாக ஆலோசிக்க, பிரித்தானிய அரசின் அவசரக் குழுவான ‘கோப்ரா’ அடுத்த வாரம் கூடவுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வுடன், பெட்ரோல் விலை மற்றும் வீட்டு எரிசக்தி கட்டணங்கள் குறித்தும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் பொருட்களின் தட்டுப்பாட்டிற்கும் விலை உயர்விற்கும் வழிவகுக்கும் என பிரித்தானிய சில்லறை விற்பனை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதேவேளை, பிரித்தானிய விவசாயத்துறை அமைச்சர் ஏஞ்சலா ஈகிள், நிலைமையை நெருக்கமாகக் கவனித்து வருவதாகவும், எரிபொருள்விற்பனையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.