பாகிஸ்தானில் கடும் மழை – 21 பேர் உயிரிழப்பு.!
பாகிஸ்தானில் பெய்துவரும் கடுமழை காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் கராச்சியின் கோரங்கி பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி நிலையத்தின் அருகே, கட்டிடத்தின் சுவரும் கூரையும் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மற்றொரு சம்பவத்தில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர். கிளிப்டன் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நகரின் பல இடங்களில் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் மொத்தம் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
இது தொடர்பில், கராச்சி மேயர் முர்தாசா வஹாப் விடுத்துள்ள அவசர குறிப்பில் “நிலைமை மோசமாக இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிந்து மாகாணத்தின் பிற பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், மீட்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளதால் தீவிர மீட்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.