கல்விதான் உங்களை சிறுத்தையாக மாற்றும்.!
“வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் வலுவாக இருந்தால், தோல்வியால் உங்களை ஒருபோதும் வெல்ல முடியாது. ஆகவே, கல்வியைச் சுமையாகக் கருதாமல் உங்கள் சிறகுகளை விரிப்பதற்கான சக்தியாகப் பாருங்கள்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கல்வி என்பது வெறும் மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமல்ல. அது உங்கள் குணாதிசயத்தைச் செதுக்கும் ஒரு கருவி. ஆடு ஆடாக இருந்தால் வெட்டப்படும், அதுவே சிறுத்தையாக இருந்தால் யாராவது நெருங்க முடியுமா? நீங்கள் சிறுத்தையாக மாறுவதற்கு இருக்கும் ஒரே வழி கல்விதான். எனவே உங்கள் கனவுகளைப் பெரிதாகக் காணுங்கள். உங்கள் உழைப்பால் அந்த கனவுகளை நனவாக்குங்கள். இந்தத் தேசம் உங்களை நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது.” – என்றார்.
ஆரம்பப் பாடசாலைகளின் வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டிகள், மிகச் சிறந்த ஒழுக்கத்துடனும் நேர்த்தியான ஒழுங்குபடுத்தலுடனும் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும், இல்லங்களுக்கான வெற்றிக் கிண்ணங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.
வித்தியாலய அதிபர் அன்ரண்டயஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சிறப்பு விருந்தினராக கரைச்சிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு.தர்மரத்தினம், கௌரவ விருந்தினராக கிராம சேவகர் திருமதி ந. வாசுகி ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.