டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க தலைவர்களை கொ*லை செய்ய சதி.!
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சில முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்யத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது.47 வயதான ஆசிஃப் மெர்சண்ட் என்ற நபர் இந்த சதி திட்டத்தில் தொடர்புடையவர் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் சிலரை இணைத்து, டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
விசாரணையில், அமெரிக்க மண்ணில் ஈரான் ஆதரவு பெற்ற சதி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையுடன் தொடர்பு கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும், நீதிமன்றத்தில் சாட்சி அளித்த ஆசிஃப் மெர்சண்ட், தாம் இந்த திட்டத்தில் இணைந்தது தனது குடும்பத்தினரை பாதுகாப்பதற்காகவே என விளக்கம் அளித்துள்ளார்.
தனது குடும்பம் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் வசிப்பதால் அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.இந்த சதி திட்டம் 2020ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தாக்குதல் டொனால்ட் டிரம்ப் தனது முதல் ஜனாதிபதி பதவிக்காலத்தில் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் சூழலில், அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் நிக்கி ஹேலி ஆகியோரும் இலக்காக இருந்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.இந்த வழக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும்வெளிநாட்டு ஆதரவு பெற்ற சதி திட்டங்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.