ட்ரம்பை கொல்*ல வேண்டும்; ஈரான் மதகுருவின் சர்ச்சைக்குரிய அழைப்பு.!
மத்திய கிழக்கு நாடுகளில் ஏழாவது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கொல்ல வேண்டும் என ஈரானின் மூத்த மதகுரு ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்குப் பதிலடி நடவடிக்கையாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு பதிலடி தாக்குதல்களையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றன.இந்த மோதல் தற்போது ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், நேற்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பு புகலிடங்களில் தஞ்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சூழலில், ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயத்துல்லா அப்துல்லா ஜவாதி அமோலி, ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, அமெரிக்காவை எதிர்த்து போராட வேண்டும் என்றும் டொனால்ட் ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷியா இஸ்லாமிய மதத்தில் ‘அயத்துல்லா’ என்பது மிக உயர்ந்த மத பதவிகளில் ஒன்றாகும். எனவே இத்தகைய மூத்த மதகுருக்கள் வெளியிடும் கருத்துகள் ஈரானின் அரசியல் மற்றும் மத சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை எனக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், ஈரான் மீது மேற்கொள்ளப்படும் வான்வழித் தாக்குதல்களை நிறுத்துவதற்கான தீர்மானம் அமெரிக்க செனட்டில் வாக்கெடுப்பிற்கு கொண்டுவரப்பட்டபோதும் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. 53க்கு 47 என்ற வாக்கு வித்தியாசத்தில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால், தாக்குதல்களைத் தொடர அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.