ஈரானில் போர் பதற்றம் தீவிரம் – வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற அனுமதி.!
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஈரானில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லைகள் வழியாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் தங்கள் பருவ இறுதி தேர்வுகளை பின்னர் எழுதவும், முனைவர் பட்ட ஆய்வறிக்கையை பின்னர் சமர்ப்பிக்கவும் அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஈரானில் உள்ள பல்கலைக்கழகங்களும் பொது நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதேபோல், பாதுகாப்பு காரணங்களால் ஈரானின் வான்வெளி சர்வதேச விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளது.ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய மாணவர்களை அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. எனினும், வான்வெளி மூடப்பட்டிருப்பது உள்ளிட்ட சவால்கள் காரணமாக வெளியேறும் முயற்சிகள் சிக்கலடைந்துள்ளன. டெஹ்ரான், உர்மியா உள்ளிட்ட நகரங்களில் உள்ள மாணவர்கள் மருத்துவம் உட்பட அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.