14 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டினர் உடனடியாக வெளியேற அமெரிக்கா உத்தரவு.!
ஈரான், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட 14 நாடுகளில் வசித்து வரும் தங்கள் நாட்டினரை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.தூதரக விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் மோரா நாம்தார் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், “அமெரிக்கர்களுக்கு எதிராக உருவாகியுள்ள கடுமையான பாதுகாப்பு அபாயங்களை முன்னிட்டு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளிலிருந்து கிடைக்கக்கூடிய வணிகப் போக்குவரத்தை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வணிக வழிகளில் புறப்பட ஏற்பாடுகள் செய்வதற்காக வெளியுறவுத்துறை உதவி தேவைப்படுவோர் வெளிநாட்டிலிருந்து+1-202-501-4444 என்ற எண்ணிலும், அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து +1-888-407-4747 என்ற எண்ணிலும் 24 மணி நேர சேவையை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திலிருந்து பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய தகவல்களைப் பெற http://step.state.gov என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.