அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை – ஈரான் புதிய கோரிக்கை.!
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களால் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என ஈரான் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருபப்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரான் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அந்த செய்தியில், ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, ஓமன் அமைதிப் பேச்சுவார்த்தை அமைப்புகள் மூலம் அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க புதிய முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஈரானின் உயர் தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கொமெய்னி (86) கொல்லப்பட்ட அடுத்த நாளே, ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
அதாவது, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள். நான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டேன். அவர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன். இதனை அவர்கள் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். விரைவாக அவர்களால் என்ன செய்திருக்க முடியுமோ அதனை செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதிக காலம் காத்திருந்துவிட்டனர் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.