அமெரிக்கா, இஸ்ரேலை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்: ஈரான் தூதரகம் தெரிவிப்பு.!
ஈரான் நாட்டின் உயர்ந்த தலைவரும் தலைமை மதகுருவுமான அயத்துல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பு உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்துக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் பொறுப்பேற்க வேண்டும் என்றும், உலக நாடுகள் அமைதியாக இருக்காமல் கடும் கண்டனம் வெளியிட வேண்டும் என்றும் இந்தியாவில் அமைந்துள்ள ஈரான் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
கமேனியின் உயிரிழப்பைத் தொடர்ந்து புது டில்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. தூதரக வளாகத்தில் ஈரான் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கமேனியின் உயிரிழப்பு ஈரான் மக்களிடையே ஆழ்ந்த துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் புரட்சிகர காவல் படை உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும், சட்டங்களுக்கு புறம்பான இந்தத் தாக்குதல் நடவடிக்கையை உலக நாடுகள் கண்டிக்காமல் அமைதியாக இருக்கக் கூடாது என்றும், அமெரிக்காவும் இஸ்ரேலும் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துள்ளதாகவும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கான கடுமையான விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.பெருமைக்குரிய ஈரான் நாடு தொடர்ந்தும் வலிமையுடனும் உறுதியுடனும் தனது பாதையில்பயணிக்கும் என்றும், தற்போதைய சூழ்நிலையால் நட்பு நாடுகளுடனான உறவுகள் பாதிக்கப்படமாட்டாது என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈரான் மக்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உயர்ந்த சிந்தனைகளை வீரமரணங்கள் காக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.