காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!
தெற்கு ஸ்காட்லாந்து பகுதியில் அமைந்துள்ள மொஃபாட் நகரம் வழியாக காற்றாலைப் பாகங்களை ஏற்றிச் செல்லும் போது, போக்குவரத்தில் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே தாமதம் ஏற்படும் என த்ரைவ் ரினியூவபிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான இறுதி சோதனை ஓட்டம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதற்கட்ட சோதனை ஓட்டத்திற்குப் பிறகு, நீளமான டிரெய்லர் வாகனங்கள் குறித்த பாதையை சிரமமின்றி கடக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.2024ஆம் ஆண்டு ஹாவிக் பகுதியில் ‘பைன்ஸ் பேர்ன்’ காற்றாலைத் திட்டத்திற்காக பாகங்கள் கடத்தப்பட்டபோது, மோசமான வானிலை, வாகனக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் மொஃபாட் நகர மக்களிடையே அச்சம் நிலவியது.ஆனால், தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஹாவிக் பகுதியில் பயன்படுத்தப்பட்டவற்றிலிருந்து மாறுபட்டவை என்றும், வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படாது என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.இன்று சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ள நிலையில், உண்மையான பாகங்கள் கடத்தும் பணி மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பொலிஸ் பாதுகாப்புடன் இரவு 8.30 மணி முதல் 9.00 மணி வரை மட்டுமே இவ்வாகனங்கள் பயணிக்கும். நகரில் சாலை மூடல் எதுவும் இருக்காது என்றும், வாகன அணிவகுப்பு கடந்து செல்லும் போது பொலிஸார் குறுகிய நேரம் போக்குவரத்தை நிறுத்துவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் சமூகத்திற்கு ஆண்டுதோறும் 2 இலட்சத்து 85 ஆயிரம் பவுண்டுகள் சமூக நல நிதியாக வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.அத்துடன், காற்றாலை அமைந்துள்ள பகுதியில் புதிய நடைபாதைகளையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.