முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீதான விசாரணை: இல்லத்தில் சோதனைகள் நிறைவு!
பிரித்தானியா நாட்டின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பொது அலுவலகத்தில் முறையற்ற நடத்தை புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தனது 66வது பிறந்தநாளான கடந்த வியாழக்கிழமை நோர்போக் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, பெர்க்சையர் பகுதியில் அமைந்துள்ள அவரது ‘ரோயல் லாட்ஜ்’ இல்லத்தில் தேம்ஸ் வேலி பொலிஸார் மேற்கொண்ட சோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2001 முதல் 2011ஆம் ஆண்டு வரை பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக பணியாற்றிய காலத்தில், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்தாரா என்பது குறித்தே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.சுமார் 11 மணி நேரக் காவலுக்கு பின்னர் ஆண்ட்ரூ விடுவிக்கப்பட்டார். எனினும், எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் தொடக்கம் முதலே திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
இதற்கிடையில், ஆண்ட்ரூ வர்த்தகத் தூதராக நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.மேலும், வர்த்தக அமைச்சர் கிறிஸ் பிரையன்ட், ஆண்ட்ரூ தனது அதிகாரத்தை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், பிரித்தானிய அரச வாரிசு வரிசையிலிருந்து ஆண்ட்ரூவை நீக்கும் முயற்சிக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த, பிரித்தானிய மன்னரைத் தலைவராகக் கொண்ட 15 பொதுநலவாய நாடுகளின் சம்மதம் அவசியமாகும். தற்போது வரை இரண்டு நாடுகள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பான விவாதங்கள் உலகளவில் தீவிரமடைந்துள்ளன.