மஸ்கெலியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தனியார் தோட்டத்தில் நேற்று (23) இடம்பெற்ற மின்சார விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று (23) மதிய வேளையில் கடும் சுகவீனம் ஏற்பட்டதாகக் கூறி குறித்த நபர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இன்று (24) காலை மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த நபர் தனது கோழிப் பண்ணைக்கு நீர் எடுத்துச் செல்லும் போது மின்சாரம் தாக்கியதில் சுயநினைவு இழந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு குழந்தைகளின் தந்தையான சுப்பிரமணியம் திருச்செல்வம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.