அனுமதியின்றி நாட்டப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகள் அகற்றப்படும் – செங்கலடி பிரதேச சபை தீர்மானம்.!
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பற்று – செங்கலடி ஸ்ரீசபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் அனுமதி இன்றித் தொல்பொருள் திணைக்களம் அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதியின்றி நாட்டப்பட்ட பதாகைகளை சட்டத்தின் கீழ் அகற்ற நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இயங்கும் செங்கலடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.1987 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க சட்டத்தின் படி, உள்ளூர் அதிகார சபைகளின் அனுமதி இன்றி இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இருப்பினும், விவசாய நிலங்கள் மற்றும் பொதுச் சொந்த இடங்களில் தொல்பொருள் இடங்கள் எனக் குறிப்பிடப்பட்ட பலகைகள் நாட்டப்பட்டுள்ளதாகவும், இதனுடன் தொடர்பாக 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அடையாளப் பலகைகளில் தமிழ் மொழி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறி, இது மொழி உரிமை மீறல் என பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். வடக்கு–கிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் முதன்மையாக இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதனையடுத்து, முறையான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஆவணங்களை வழங்க தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலக்கெடுவிற்குள் விளக்கம் வழங்கத் தவறினால், பிரதேச சபையின் அதிகாரத்தை பயன்படுத்தி அடையாளப் பலகைகள் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் மத்திய அரசிற்கும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதுடன், தேவையாயின் சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க சபை தீர்மானித்துள்ளது.
