ஹட்டனில் நகைக் கடையில் வாடிக்கையாளர் போல் வந்து தங்கச் சங்கிலி திருட்டு.!
ஹட்டன் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தங்க நகைக் கடையொன்றில், வாடிக்கையாளர் போல நடித்து வந்த நபர் ஒருவர், ரூ.2 இலட்சத்து 85 ஆயிரம் பெறுமதியான தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற சம்பவம் இன்று (21) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தங்கச் சங்கிலி வாங்குவதற்காக வந்தவர் போல் கடைக்குள் நுழைந்த குறித்த நபர், அங்கிருந்த பெண் ஊழியர்கள் காண்பித்த பல நகைகளை கவனமாகப் பார்வையிட்டுள்ளார்.
பின்னர் ஒரு தங்கச் சங்கிலியை ஆய்வு செய்வது போல் எடுத்துக் கொண்ட அவர், திடீரென அதனை எடுத்துக்கொண்டு கடையிலிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவ நேரத்தில் கடையில் இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். கடையின் உரிமையாளர் தனிப்பட்ட தேவைக்காக வெளியே சென்றிருந்த சூழ்நிலையை பயன்படுத்தியே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலியின் பெறுமதி சுமார் ரூ.2 இலட்சத்து 85 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை சந்தேக நபரின் அடையாளம் கண்டறியப்படவில்லை.
எனவே, குறித்த நபர் தொடர்பான தகவல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான விபரங்கள் தெரிந்தவர்கள், அதனை உடனடியாக தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.