சின்னக்குயில் சித்ராவின் “ஒரு சகாப்தம்” இசை நிகழ்ச்சி – கொழும்பில் பிரம்மாண்ட ஊடக சந்திப்பு.!
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி, ‘சின்னக்குயில்’ கே.எஸ். சித்ரா பங்கேற்கும் “சின்னக்குயில் ஒரு சகாப்தம்” என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி குறித்த விபரங்களை வெளியிடுவதற்கும், உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடக சந்திப்பு நேற்று (17) கொழும்பு ஒன் கோல் ஃபேஸ் வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள லேக் ஏட்ரியம் பகுதியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.Falcon Global Solution, JFX Productions மற்றும் NE Productions அகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த இசைப் பெருவிழாவானது, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
நேற்றைய ஊடக சந்திப்பில் பாடகி கே.எஸ். சித்ரா அவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டு, இலங்கையில் உள்ள தனது இசை இரசிகர்களை மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததோடு ஊடகவியலாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது இனிய குரலால் தான் பாடிய பாடல்களில் ஒரு சில வரிகளையும் பாடினார்.பல தசாப்தங்களாகத் தனது தேன் குரலால் உலகவாழ் இசை ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ள சித்ராவின் இந்த நேரடி இசை நிகழ்ச்சி, இலங்கையில் உள்ள அவரது ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத இசை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.