232 ஆண்டுகால உலக சாதனை முறியடித்த பாகிஸ்தானிய உள்ளூர் கிரிக்கெட் அணி.!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ‘பிரசிடெண்ட்ஸ் கிண்ணம்’ (Presidents Trophy) முதல்தர கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் டீவி அணி 232 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்த போட்டியில் சுய் நொதர்ன் கேஸ் (Sui Northern Gas) அணிக்கு எதிராக 40 ஓட்டங்கள் என்ற மிகக் குறைந்த இலக்கை வெற்றிகரமாகத் தற்காத்து பாகிஸ்தான் டிவி அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் இந்தளவு குறைந்த ஓட்டங்களைப் பாதுகாத்து ஒரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னதாக, கடந்த 1794 ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஓல்ட்ஃபீல்ட் (Oldfield) அணி, MCC அணிக்கு எதிராக 41 ஓட்டங்களைப் பாதுகாத்து வெற்றி பெற்றதே 232 ஆண்டுகளாக உலக சாதனையாக இருந்தது. அந்த நீண்டகால சாதனையை தற்போது பாகிஸ்தான் டீவி என்ற அணி தகர்த்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் டீவி அணி 166 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பதிலுக்கு துடுப்பாடிய சுய் நொதர்ன் அணி 238 ஓட்டங்களைக் குவித்து 72 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் டிவி அணி 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் எதிரணிக்கு வெறும் 40 ஓட்டங்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி பெறுவது மிக எளிது எனக் கருதப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அலி உஸ்மான் அபாரமாகப் பந்துவீசி 9 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனால் சுய் நொதர்ன் அணி வெறும் 37 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 2 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதனை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அலி உஸ்மானின் அபாரமான பந்துவீச்சு கிரிக்கெட் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.