கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து காஷ்மீர் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் இரத்து.!
இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீரில் அமைந்துள்ள ஒரு முக்கிய மருத்துவக் கல்லூரி, வலதுசாரி இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக் கல்வி மற்றும் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் தேசிய மருத்துவ ஆணையம் (NMC), ஜனவரி 6ஆம் திகதி ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ நிறுவனம் (SMVDMI) என்ற கல்லூரியின் அங்கீகாரத்தை இரத்து செய்துள்ளது. இக்கல்லூரி, ஜம்மு சமவெளி மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கை பிரிக்கும் பீர் பஞ்சால் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ளது.
நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட முதல் MBBS (மருத்துவப் பட்டம்) பிரிவில் சேர்ந்த 50 மாணவர்களில் 42 பேர் முஸ்லிம்கள் என்பதே எதிர்ப்புகளுக்குக் காரணமாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில், 7 பேர் இந்துக்கள், ஒருவர் சீக்கியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரி, ஒரு இந்து மத அறக்கட்டளையால் நிறுவப்பட்டதுடன், அரசின் பகுதி நிதியுதவியையும் பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைகள் NEET எனப்படும் மையத் தேர்வின் மூலம் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கின்றனர். அரசுக் கல்லூரிகளில் இடங்கள் குறைவாகவும் கட்-ஆஃப் அதிகமாகவும் இருப்பதால், குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்கின்றனர்.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதான சனியா ஜான், NEET தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் SMVDMI-யைத் தேர்ந்தெடுத்தார். “மருத்துவர் ஆகுவது என் வாழ்நாள் கனவு,” என்று அவர் அல்ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், மாணவர்களின் மத அடையாளத்தை முன்வைத்து, “வைஷ்ணோ தேவி கோயிலின் காணிக்கைகளால் இயங்கும் கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள் படிப்பதற்கு உரிமையில்லை” என சில இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இதனைத் தொடர்ந்து கல்லூரியின் MBBS சேர்க்கைப் பட்டியலை இரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சூழ்நிலையின் பின்னணியில், மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டமை, இந்தியாவில் கல்வி மற்றும் மத அரசியல் தொடர்பான புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.இச்சம்பவம், சிறுபான்மை மாணவர்களின் கல்வி உரிமைகள் மற்றும் மதநிலை சார்ந்த கவலைகளை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.