அதிக சுழல் வீரர்களுடனான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு!
இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்திற்கு வலுவான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்ட குழாத்தை நியூசிலாந்து அறிவித்துள்ளது. மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி உலகக் கிண்ணத்தின் ஆரம்ப சுற்றில் நான்கு போட்டிகளில் மூன்று ஆட்டங்களை சுழற்பந்துக்குச் சாதகமான சென்னை, சேப்பாக்கம் அரங்கிலேயே ஆடவுள்ளது. இதனால் சான்ட்னருடன் இஷ் சோதி, மைக்கல் பிரஸ்வெல், கிளன் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவிந்திரா ஆகியோருடன் சுழற்பந்து வீச்சு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொரும்பாலான நியூசிலாந்து வீரர்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு இந்தியா வந்துள்ளனர். உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணி டி குழுவில் இடம்பெற்றிருப்பதோடு அந்தக் குழுவில் தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடம்பெற்றுள்ளன.
நியூசிலாந்து குழாம்: மிட்சல் சான்ட்னர் (தலைவர்), பின் அலன், மைக்கல் பிரஸ்வெல், மார்க் சப்மன், டெவோன் கொன்வோய், ஜகப் டபி, லொக்கி பெர்கியூசன், மட் ஹென்ரி, டரில் மிட்சல், அடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, டிம் செய்பேர்ட், இஷ் சோதி.