வடக்கில் ரஷ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டும்! ஆளுநர் தெரிவிப்பு.!
வடக்கில் ரஷ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை (05.01.2026) மாலை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களுக்குப் பின்னர் ரஷ்யத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டமை மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டு ஆளுநர் அவரை வரவேற்றார்.இந்த சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த ரஷ்யத் தூதுவர், ‘ரஷ்யச் சுற்றுலாவிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
எனினும், வடக்கு மாகாணத்துக்கான ரஷ்யச் சுற்றுலாவாசிகளின் வருகை மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு வரும் ரஷ்யப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வடக்கு மாகாணம் தனது சுற்றுலாத் திட்டங்களை முன்னெடுப்பது சிறப்பாக அமையும், எனச் சுட்டிக்காட்டினார்.இதற்குப் பதிலளித்த ஆளுநர், இந்தியாவுடனான நேரடி விமான சேவை காரணமாக அதிகளவான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு வருகை தருகின்றனர்.
வடக்கு மாகாணமானது சுற்றுலாவிகள் தங்கிச் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பான சூழலைக் கொண்டுள்ளது. இதனைத் தாங்கள் ரஷ்ய மக்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களின் வருகையை அதிகரிக்க உதவ வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.