இருவேறு சம்பவங்களில் உ**யிரிழந்த இளைஞர்களின் சட**லங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.!
அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளின் பின்னர் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அந்தவகையில், அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி 05ஆம் குடியேற்றக் கிராமத்திலுள்ள வெல்டிங் கடை ஒன்றில் தங்கியிருந்து தொழில் புரிந்து வந்த முஹம்மட் பரீத் (வயது 20) என்ற திருமணமாகாத இளைஞன் நேற்று புதன்கிழமை (25) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், தனிப்பட்ட விவகாரம் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
மாவட்ட நீதவானும் கல்முனை நீதிமன்றப் பதில் நீதவானுமாகிய தயாபரன் திவாகர் அவர்களின் கட்டளையின் பிரகாரம், பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி பஹத் ஸமான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு சட்ட வைத்திய அதிகாரி எஸ்.எம்.எம். றிபாஸ்தீன் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில், தூக்கினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சவளக்கடை பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்முனை தரவை கோயில் பகுதிக்கு அருகாமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சகோதரர்கள் இருவரில் முஹம்மட் இக்பால் அகில் (வயது 23) என்பவர் உயிரிழந்திருந்தார்.
கல்முனை ஹனிபா வீதியைச் சேர்ந்த இச்சகோதரர்கள் இருவரும் வழமைபோல் கல்முனை சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது, பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பட்டா ரக வாகனத்தின் கதவு எதேச்சையாகத் திறந்ததில் அதில் மோதி வீதியில் வீழ்ந்துள்ளனர்.
இதன்போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் 23 வயதுடைய சகோதரர் உயிரிழந்ததுடன், அவரது 19 வயதுடைய சகோதரர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
கல்முனை நீதிமன்ற பதில் நீதவான் தயாபரன் திவாகர் அவர்களின் கட்டளையின் பிரகாரம், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் மீதான மரண விசாரணை திடீர் மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் நடைபெற்றது.
சட்ட வைத்திய அதிகாரி எஸ்.எம்.எம். றிபாஸ்தீன் மேற்கொண்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக உண்டான தீவிர இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



