கோட்டாவுக்கு நீதிமன்றத்தில் இன்று இரட்டைப் பின்னடைவு!
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவைக் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று புதன்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதேவேளை, 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று புதன்கிழமை நீதியரசர் மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், மேன்முறையீட்டு மனுவை உறுதிப்படுத்துவதற்கான சமர்ப்பணங்களை எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி முன்வைக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை (ரிட்) மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும், அந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


