கொழும்பில் மும்மொழிப் பாடசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்டக் கல்வி உபகுழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொழும்பின் சில பகுதிகளில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளின் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் பாடசாலை வருகை குறைவடைதல் மற்றும் இடைவிலகல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்குத் தீர்வாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தமிழ் மொழிமூல வகுப்புகளை ஆரம்பிப்பதுடன், எதிர்காலத்தில் மும்மொழிப் பாடசாலை ஒன்றை நிறுவவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தனது தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு எனப் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் ஒன்றிணைக்கப்படும்போது, மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாடசாலை போஷாக்குத் திட்டத்தினால் சில பகுதிகளில் மாணவர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ் இன்றி பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து நடமாடும் சேவைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்தில் பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நிர்வகிப்பதற்கான புதிய கொள்கைக்கு பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இதன்மூலம் 2027ஆம் ஆண்டு முதல் முறையான இடமாற்றச் செயன்முறையை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்தல், முன்பள்ளி ஆசிரியர்களுக்குச் செயன்முறைப் பயிற்சிகளை வழங்குதல் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களில் மாணவர்களை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பல பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


