உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்; இறுதி முடிவை அவசரப்படுத்த வேண்டாம்.!

இலங்கை செய்திகள் 26 நிமிடங்கள் முன்
103 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் அவசியம்; சிவில் தரப்பினரையும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (23.11.2026) நாடாளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய அவர், பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ தொடர்பில் ஆளுகை, நீதி தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7ஆம் திகதி குறித்த சட்டமூலம் தொடர்பில் பொதுக் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், பொதுமக்களுடனான கலந்துரையாடல் நடைபெறுவதற்கு முன்னதாகவே குறித்த சட்டமூலம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்படவுள்ளதாக சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அஜித் பி. பெரேரா, பைசர் முஸ்தபா, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோருடன் இணைந்து சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

துறைசார் மேற்பார்வைக் குழு கூடுவதிலோ அல்லது குறித்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதிலோ தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், எனினும், அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் பற்றியே துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், 1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்று வரை நடைமுறையில் இருந்து வருவதாகவும், அந்தச் சட்டத்தினால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பாரதூரமானவை என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில் அவசரமாகத் தீர்மானங்களை எடுக்காமல், விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்தச் சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல்களில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்றும் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாட்டில் சட்டமூலங்கள் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுக்களிலேயே கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்படுமாயின் நாடாளுமன்றத்தின் தேவை மற்றும் முக்கியத்துவம் கேள்விக்குறியாகிவிடும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், நாடாளுமன்றம் நீதிமன்றத்துக்குக் கட்டுப்பட்டதல்ல எனவும், அரசியலமைப்பின் 4(சி) பிரிவின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் அதிகாரமே நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தனது கருத்தை முன்வைத்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல்கள், உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் பங்களிப்பு தொடர்பான விவாதங்கள் இன்றைய அமர்வில் இடம்பெற்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் பயணித்த வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்து.!

வெலிகம, மிதிகம பிரதேசத்திலுள்ள புகையிரதக் கடவையொன்றில், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து மாத்தறை…

98 0 0
இலங்கை செய்திகள்

வேலணை பிரதேச சபையின் 2027 பாதீடு நிறைவேற்றம்.!

22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மேலதிக 14 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை…

102 0 0
இலங்கை செய்திகள்

கஞ்சாவை கடத்திச் சென்ற மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் கைது.!

தனமல்வில, ஹம்பேகமுவ பகுதியில் வாகனமொன்றில் உலர்ந்த கஞ்சாவைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பேகமுவ பொலிஸ்…

101 0 0
இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் அரசுக்கு எதிராக அரச ஊழியர்கள் போர்க்கொடி.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (23) அரச சேவையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடளாவிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அந்தவகையில்…

123 0 0