ஊழல்வாதிகளைக் கைது செய்கின்றமையை அரசியல் பழிவாங்கல் என்று சொல்லாதீர்கள்!
“ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித அரச நிதியை மோசடி செய்துள்ளார் என அக்கட்சியின் உறுப்பினரான தயாசிறி ஜயசேகர ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஊழல்வாதிகளைக் கைது செய்வதும், சட்ட நடவடிக்கை எடுப்பதும் அரசியல் பழிவாங்கல் அல்ல. ஊழல்வாதிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடை பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க உறுப்பினரான ஆனந்த பாலித கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். வரவு – செலவுத் திட்டத்துக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால், 2015 முதல் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆனந்த பாலித இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து முறையற்ற வகையில் 31 இலட்சம் ரூபா மேலதிக கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டுள்ள குற்றச்சாட்டுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது.
ஆனந்த பாலிதவுக்குச் சார்பாக நாடாளுமன்றத்தில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ‘இதுபோன்ற ஊழல்வாதிகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலும் உள்ளார்கள்’ என்று தெரிவித்தார். அவ்வாறாயின், ஆனந்த பாலித ஒரு ஊழல்வாதி என்பதைத் தயாசிறியே பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் உள்ள ஏனைய ஊழல்வாதிகள் தொடர்பான விவரங்களையும் உடனடியாகப் பகிரங்கப்படுத்துமாறு தயாசிறியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.


