உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25 ஆயிரத்தால் உயர்த்துமாறு கோரிக்கை

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
127 பார்வைகள்

அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படாத நிலையில், அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கக் கோரி, அடுத்த வாரம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளன என்று அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் கூறுகையில்,

“அரசு சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டம் நாட்டுக்கும் மக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் ஒட்டுமொத்த தொழிலாளர் சமூகத்துக்கும் பயனளிக்காத ஒன்றாகும். இந்த வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக எவருக்கும் குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கவில்லை. மாறாக, சில சிறிய சம்பள அதிகரிப்புகளை அறிவித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் காண்பிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை, சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ், இராணுவம் மற்றும் சுகாதாரத் துறையின் சில பிரிவினருக்குச் சிறியளவிலான சம்பள அதிகரிப்புகளும் கொடுப்பனவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், அவற்றில் ஒரு பகுதி 2027ஆம் ஆண்டிலிருந்தும், எஞ்சிய பகுதி 2028ஆம் ஆண்டிலிருந்தும் வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய வாழ்க்கைச் செலவுச் சுமையை எதிர்கொள்ள முடியாது.

அரசின் தரவுகளின்படி, விலைவாசி அதிகரிப்பு 8.3 சதவீதமாக இருக்கும்போது, அறிவிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு 2.9 சதவீதம் என்ற அளவிலேயே காணப்படுகின்றது. எனவே, சம்பள அதிகரிப்பினால் கிடைக்கும் நன்மையை விலைவாசி உயர்வு விழுங்கிவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வரி அதிகரிப்புகளும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றமும் மக்களின் வாழ்க்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன.

இன்றைய பொருளாதாரச் சூழலில் இளைஞர்களுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் உரிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான திட்டங்களும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை. குறிப்பாக, 15 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 18 இலட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கான வாய்ப்புகள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.

அரசிடம் பெருமளவு நிதி இருப்பின், அதனை உழைக்கும் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். அந்த நிதியிலிருந்து அரச, அரை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும். இதுவே தற்போது அனைத்துத் துறைகளையும் சேர்ந்த உழைக்கும் மக்களின் பிரதான கோரிக்கையாகும்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதால், பல்வேறு துறைகளில் தனித்தனியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை ஒன்றிணைத்து, அடுத்த வாரத்தின் நடுப்பகுதியிலோ அல்லது இறுதிப் பகுதியிலோ அனைத்துத் தரப்பினரையும் வீதிகளில் இறக்கி ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கோரிக்கைக்கு உரிய பதிலை வழங்காவிட்டால் தொழிற்சங்கப் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாலதி நினைவேந்தல் நிகழ்வு : முன்னாள் எம்.பி. கஜேந்திரன் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கு, கோப்பாய் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம்…

126 0 0
இலங்கை செய்திகள்

வாழ்க்கைச் செலவுக்கு நிவாரணம் என்று நம்பியிருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது!

அரசு முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும், மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்…

118 0 0
இலங்கை செய்திகள்

பங்களாதேஷிற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழைப்பு!

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷிற்கு அரச விஜயத்தை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மானினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு விடுக்கப்பட்ட…

116 0 0
இலங்கை செய்திகள்

ஊழல்வாதிகளைக் கைது செய்கின்றமையை அரசியல் பழிவாங்கல் என்று சொல்லாதீர்கள்!

“ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித அரச நிதியை மோசடி செய்துள்ளார் என அக்கட்சியின் உறுப்பினரான தயாசிறி ஜயசேகர ஏற்றுக்கொண்டுள்ளார். ஊழல்வாதிகளைக் கைது செய்வதும், சட்ட…

121 0 0