அப்பாவி மலையக மக்களை ஏமாற்றுவோர் தலையில் இடிதான் விழும் : நாடாளுமன்றத்தில் மனோ எம்.பி. ஆவேசம்!
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட உரை மீதான விவாதத்தில் சிங்கள மொழியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-
“பெருந்தோட்டக் கம்பனிகளிடம் தோட்டங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் காணிகள் பாதுகாப்பாக இருக்கும். என்றாவது ஒரு நாளாவது எமது மக்களுக்கு வழங்குவதற்குக் காணிகள் எஞ்சியிருக்கும். எனக்கு அரசிடம் பயமும் இல்லை, கடப்பாடும் இல்லை. ஏனெனில் எனக்கு எதிராக எந்தவொரு கோப்பும் இல்லை.
சம்பள நிர்ணய சபையில் தீர்மானித்து, வர்த்தமானி பிரகடனத்துடன் 200 ரூபா சம்பள உயர்வை அறிவிக்க வேண்டும். கடந்த முறை நல்லெண்ண நோக்கில் இரண்டாம் நிலை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தோம். ஆனால் இம்முறை அவ்வாறில்லை. நீங்கள் சம்பளத்தைக் கூட்டி, கம்பனிகளுக்கு நிறைச் சுமையைக் கூட்டவும் இடம்கொடுத்து விட்டீர்கள்.
மலையக மக்களுக்குப் போதுமான நிதி ஒதுக்காமல், பெருந்தோட்டத் தொழில்துறைக்கு ஒதுக்கிய 13 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை மலையக மக்களுக்கு ஒதுக்கினோம் எனப் பொய் சொல்கிறீர்கள். ஆட்சிக்கு வருவதற்குப் பொய் சொல்வதைக்கூடப் புரிந்துகொள்ளலாம். ஆனால், ஆட்சியை நடத்துவதற்குப் பொய் சொல்வதை ஏற்க முடியாது. அதிலும், அப்பாவி மலையக மக்களை ஏமாற்றுவோர் தலையில் இடிதான் விழும்.
பெருந்தோட்டக் கம்பனிகளுடன் புதிய குத்தகை ஒப்பந்தம் செய்வதற்கு ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். அதற்குத் தகுந்த யோசனைகளை நாம் வழங்கத் தயாராக உள்ளோம். அதற்காக உங்களை நாற்காலி, மேசை எடுத்துக்கொண்டு ‘டியூஷன்’ படிக்க வரச் சொல்லவில்லை. உட்கார்ந்து கலந்துரையாடித் தீர்மானிக்கலாம்.
காணி உரிமை என்றால் என்ன? 20 பேர்ச் வதிவிடக் காணி தோட்டத்தில் வேலை செய்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட வேண்டும். திருமணமான ஒவ்வொரு ஜோடியும் ஒரு குடும்பம்தான். இதுதான் முழுமையான காணி உரிமை.
2022ஆம் ஆண்டில் எமது கூட்டணி சாசனத்தில் இதனைச் சொன்னோம். அதையேதான் 2023ஆம் ஆண்டில் நீங்கள் உங்கள் ‘ஹட்டன் பிரகடனத்தில்’ சொன்னீர்கள். பயிரிடப்படாத தரிசுக் காணிகளைத் தோட்ட இளைஞர்களுக்குப் பிரித்து வழங்குவதாகச் சொன்னீர்கள். ஆனால் இன்று ஒரு அங்குலம் கூடத் தரவில்லை. மாறாக, தனியார் கம்பனிகளுக்குப் பிரித்து கொடுக்கிறீர்கள். இது நியாயமானதா எனக் கேட்கின்றேன்.” – என்றார்.


