சீன உளவுத்துறையுடன் தொடர்பா? – Nvidia CEO பதவிக்கு நெருக்கடி!
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவின் Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) பதவியிலிருந்து நீக்கப்படுவது குறித்து நிறுவனத்தின் பணிப்பாளர் சபை பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் அவர் முறையற்ற உறவைப் பேணியதாகவும், நிறுவனத்தின் உயர் பதவியிலுள்ள பெண் ஊழியர் ஒருவருடனும் தொடர்பில் இருந்ததாகவும் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளே இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த நவம்பர் 8ஆம் திகதி சுயாதீன விசாரணையை முன்னெடுக்க Nvidia பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளதுடன், வெளிப்புற சட்ட ஆலோசகர்களின் உதவியையும் நாடியுள்ளது.
எனினும், இந்த விவகாரத்தால் நிறுவனத்தின் இரகசியத் தகவல்களுக்கோ அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கோ பாதிப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை என Nvidia தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து நிறுவனத்தின் பங்குகளின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1993ஆம் ஆண்டு Nvidia நிறுவனத்தை இணைந்து நிறுவிய ஜென்சன் ஹுவாங்கின் பதவி தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


