உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

7 வீத பொருளாதார வளர்ச்சி இலக்குடன் நாடாளுமன்றில் பாதீடு சமர்ப்பிப்பு

இலங்கை செய்திகள் 13 நிமிடங்கள் முன்
56 பார்வைகள்

2027ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

‘பொருளாதாரப் பரிமாற்றம் – நிலையான அபிவிருத்தி’ என்பதைப் பிரதான இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப் பாதீட்டில், 7 சதவீத நிலையான வருடாந்தப் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும், மூலதனச் செலவினங்களுக்காக 2,000 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளின் முழு விபரம் வருமாறு:-

பொருளாதாரக் கொள்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம்:

  • நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை முழுமையாகப் பாதுகாத்துள்ளதாகவும், ஒவ்வொரு ரூபாவுக்கும் மக்களுக்குப் பொறுப்புக்கூறுவதே தமது இலக்கு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
  • நாட்டின் பணவீக்கம் 8.3 சதவீதமாகப் பதிவாகியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து கடன் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது அவசியமாகும். இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து ஆராய விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
  • 528 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சுமையைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் தாங்க முடியுமா என்பது குறித்துத் திறைசேரி மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சமூகப் பாதுகாப்பு மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு:

  • அஸ்வெசும: அஸ்வெசும உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புக் கொடுப்பனவுகளுக்காக 230 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள்: இவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவு 10,000 ரூபாவிலிருந்து 12,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறை மற்றும் மாணவர் நலன்:

  • ஆசிரியர் கொடுப்பனவுகள்: கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 10,500 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாகவும், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவு 12,500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • மாணவர் சலுகைகள்: தெரிவுசெய்யப்பட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்குப் பிராட்பேண்ட் வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரச வங்கிகள் ஊடான வட்டியற்ற கடனுதவி தொடர்ச்சியாக வழங்கப்படுவதுடன், அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • கல்விச் சீர்திருத்தம்: 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

வடக்கு மாகாணம் மற்றும் பிராந்திய அபிவிருத்தி:

  • வடக்கு கடற்றொழில் மற்றும் வீதி அபிவிருத்தி: வடக்கு மாகாண கடற்றொழில் அபிவிருத்திக்கு 5,000 மில்லியன் ரூபாவும், வடக்கிலுள்ள உப்பளங்களை அண்மித்த அணுகு வீதிகளை அமைப்பதற்கு 236 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • யாழ்ப்பாணம் நீர்ப் பாதுகாப்பு: யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நன்னீர் மீன்பிடி மற்றும் இழப்பீடு: நன்னீர் மீன்பிடித்தொழிலை ஊக்குவிக்க 6,200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மீன்பிடித் தொழிலில் ஏற்படும் திடீர் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை 2 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • வீதி மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி: நாடளாவிய வீதிகள் அபிவிருத்திக்காக 487 பில்லியன் ரூபாவும், பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்காக 13,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் தொலைத்தொடர்பு:

  • சீரான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக 26.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியிலிருந்து ஹபரணை வரை புதிய மின் பரிமாற்ற அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
  • நுரைச்சோலை மின் நிலையத்தில் அவசர காலங்களில் மேலதிக மின்சாரத்தை வழங்குவதற்காக 30 மெகாவாட் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
  • சூரிய மின் உற்பத்தி செய்வோருக்கு மின்கலன் அமைப்புக்காக 25,000 ரூபா நிவாரணமும், மாதாந்தம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் 3 இலட்சம் நுகர்வோருக்கு இலவசமாக ‘ஸ்மார்ட்’ மின்மானிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • கையடக்கத் தொலைபேசி இணைப்புகளின் தொடர்பாடல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நவீன தானியங்கி முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரச நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவை அதிகரிக்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவு

அரச சேவை நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு 2027 வரவு செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

65 0 0
இலங்கை செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் சீனி மீதான வரி உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில்…

73 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட சமூகத்தின் நலன், விவசாய அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு.!

சுதந்திர இலங்கையின் 81ஆவது வரவு – செலவுத் திட்டமாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான கௌரவ அநுரகுமார திசாநாயக்க அவர்களினால்…

74 0 0
இலங்கை செய்திகள்

தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற பெண் கைது.!

சட்டவிரோதமாக இரண்டு கோடியே நாற்பத்தைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட…

80 0 0