நாட்டில் சர்வாதிகாரப் போக்கை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி.!
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பிரதான அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருண பின்வருமாறு குறிப்பிட்டார்.
“அரசாங்கம் கொண்டுவரத் தயாராகிவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டம் என்பனவற்றின் மூலம் நாட்டின் பேச்சுச் சுதந்திரமும் கருத்து வெளிப்பாட்டின் சுதந்திரமும் முழுமையாக நசுக்கப்படுகின்றன.
எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்தச் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்ற தற்போதைய அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தற்போதைய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகிய இருவரும், இன்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு அதே அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.
இந்தச் சட்டங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் தூதரகங்களும் கூட தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், பிடியின்றியே எந்தவொரு காவல்துறை அல்லது முப்படை அதிகாரியும் சாதாரண மக்களைக் கைது செய்யக்கூடிய சட்டங்களைக் கொண்டுவந்து நாட்டை வட கொரியாவாக மாற்றவே அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு விதமாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் மற்றொரு விதமாகவும் பேசுவது எவ்வாறு என்பது கேள்வியாகும்.
அரசாங்கம் ஒரு சர்வாதிகாரப் பாதையில் செல்ல முயற்சிக்கிறது. அதேபோல், அரசாங்கம் பலவந்தமாக 22ஆவது திருத்தச் சட்டத்தைத் திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்தது. அதன்படி, 22ஆவது திருத்தச் சட்டம் மூலம் நீதிமன்றத்திற்கு அரசியல் அழுத்தங்களை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அதனால்தான் அரசாங்கத்திற்குத் தேவையானவாறு தீர்ப்பு வழங்காத கம்பஹா நீதவானை திடீரென இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கம்பஹா நீதவானை அவ்வாறு இடமாற்றம் செய்வதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.
அரசாங்கம் நீதித்துறையின் சுதந்திரத்தை அழித்து வருகிறது.
மேலும், நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை வரவு – செலவுத் திட்ட விவாதம் நடைபெறவுள்ளது.
எனவே, இந்த ஆண்டில் புதிய சட்டங்களைக் கொண்டுவர முடியாது என்பதை அரசாங்கமும் அதிபரும் அறிவர்.
எவ்வாறாயினும், இந்தச் சட்டங்களை அடுத்த வருடம் எப்படியாவது கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது. எனினும், அடுத்த வருடம் இந்தச் சட்டங்களைக் கொண்டுவர முயன்றால், மக்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி வீதிக்கு இறங்கும்.
அதேபோல், அரசாங்கம் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
பெலவத்தை அலுவலகத்தின் அலமாரிகளில் போடப்பட்டுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை எடுத்துப் பார்க்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
அந்தப் கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயங்களை நிறைவேற்ற இம்முறையாவது வரவு – செலவுத் திட்டத்தில் செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோருகிறது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம் என்றனர், மின் கட்டணத்தை மூன்றில் ஒன்றால் குறைப்போம் என்றனர், பெற்றோல் மற்றும் டீசல் விலை சூத்திரங்களை ஒழித்து துறைமுகத்திற்கு இறக்கும் விலைக்கு வழங்குவோம் என்றனர்.
முடியுமானால் இந்த வரவு – செலவுத் திட்டத்திலாவது இந்த வாக்குறுதிகளுக்கு நியாயம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதாக அரசாங்கம் அறிவித்தது, அதற்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளதால், இம்முறையாவது வரவு – செலவுத் திட்டத்தில் கூறிய விடயங்களை நிறைவேற்றுங்கள்.
மேலும், 50 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பெய்ததால் கொழும்பு நகரம் மூழ்கிவிட்டதாக கொழும்பு மாநகர மேயர் கூறுகிறார். அப்படியானால் தவறு மழையின் மீதா? எவ்வாறாயினும், நகைச்சுவையான கதைகளை நாட்டுக்குக் கூற வேண்டாம் என கொழும்பு மாநகர மேயரிடம் கேட்டுக்கொள்கிறோம். கொழும்பு நகருக்கு இதைவிட அதிகமான மழை கிடைத்துள்ளதாகவும், மாநகரசபை சாக்கடைத் தொகுதியைச் சுத்தப்படுத்தாமல் இருப்பதே பிரதான பிரச்சினை என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் தெரிவித்தார்.
நவம்பர் மாதம் எல் நினோ நிலைமையுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் அறிவித்திருந்தனர். ஆனால் மாநகரசபையின் ஆட்சியாளர்களுக்கு அது தெரியவில்லை. கடந்த 76 ஆண்டுகளையும் மழையையும் குறைகூறிக்கொண்டிராமல், இப்போதாவது வடிகான்களைச் சுத்தப்படுத்த கொழும்பு மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.


