வவுனியாவில் 11,000 மரங்களை நட்டு 9,000 மரங்களைப் பாதுகாத்த மருதம் பசுமை இயக்கம் – சத்தியலிங்கம் எம்பி பாராட்டு…!
வவுனியாவில் 11,000 மரங்களை நட்டு 9,000 மரங்களைப் பாதுகாத்த மருதம் பசுமை இயக்கத்திற்கு நாடாளுமன்றத்தில் சத்தியலிங்கம் எம்பி பாராட்டு தெரிவித்தார். வீதி ஒதுக்கு பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றை தயாரித்தல் தொடர்பில் இன்றைய தினம் (06.11.2026) பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கௌரவ சபாநாயகர் அவர்களே, கௌரவ உறுப்பினர் லசித் பாஷன கமகே அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல் மற்றும் அவற்றைப் பராமரித்தல் தொடர்பான இந்தத் தனிநபர் பிரேரணையை நான் மிகவும் வரவேற்கின்றேன்.
மரங்களை நடுவது மாத்திரமல்லாமல், அவற்றை முறையாகப் பராமரித்து வளர்ப்பதற்கான ஒரு திட்டமிடப்பட்ட பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்ற அவரது கருத்து மிகவும் முக்கியமானதாகும்.
எமது நாட்டில் கடந்த காலங்களில், குறிப்பாக வீதி அபிவிருத்திப் பணிகளின்போது, நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான மரங்கள்கூட வெட்டியழிக்கப்படுகின்றன.
குறிப்பாக, வவுனியா நகரைப் பொறுத்தவரையில், ஏ-9 பிரதான வீதியோரங்களில் ஒரு காலத்தில் காணப்பட்ட பசுமையான சூழல் இன்று பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் பசுமை நிறைந்த நகரமாக விளங்கிய வவுனியா இன்று பல இடங்களில் மரங்களற்ற வெப்பமான பிரதேசமாக மாறியுள்ளது.
எனவே, இவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்கு இந்தப் பிரேரணை மிகவும் அவசியமானதாகும்.
மரங்களை நடுவதற்கான திட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, உள்ளூராட்சி மன்றங்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
ஏனெனில், ஒரு புறத்தில் மரங்களை நட்டு வளர்க்கின்றோம். மறுபுறத்தில் மின்சாரக் கம்பிகள், தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் வீதி அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் வளர்ந்த மரங்கள் வெட்டப்படுகின்றன. இத்தகைய முரண்பாடுகளைத் தவிர்க்க அனைத்துத் திணைக்களங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் அவசியமாகும்.
அத்துடன், இந்தத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கி, அவற்றையும் மரநடுகை மற்றும் பராமரிப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
வனவளப் பாதுகாப்பு தொடர்பாகப் பேசும்போது, எமது வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எமது பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக, 15,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதிகள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஆனால் இன்று, யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புகின்ற மக்கள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களைக் கொண்ட தமது பாரம்பரியக் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது வனவளத் திணைக்களத்தின் நடவடிக்கைகளால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதற்கு உதாரணமாக வவுனியா மாவட்டத்தின் கள்ளிக்குளம் சிதம்பரம் கிராமம் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன்.
அந்தப் பாரம்பரியக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் யுத்த காலத்தில் முழுமையாக இடம்பெயர்ந்திருந்தனர். மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்தபோது, பயிரிடப்பட்ட வயல் நிலங்களுக்குள்ளேயே வனவளத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே, வனங்களைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று மக்களின் பாரம்பரியக் காணி உரிமைகளையும் விவசாய வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 28 முதல் 29 சதவீதம் வரையான பகுதியை வனப்பகுதியாகப் பாதுகாக்க வேண்டும் என்ற இலக்கை நான் வரவேற்கின்றேன். ஆனால், அந்த இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகள் மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே, இறுதியாக, வவுனியா மாவட்டத்தில் தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பான முயற்சியையும் இந்தச் சபையில் குறிப்பிட விரும்புகின்றேன்.
வேலுப்பிள்ளை தனபாலசிங்கம் அவர்கள் ஆரம்பித்த மரநடுகை முயற்சி இன்று மருதம் பசுமை இயக்கம் என்ற அமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் அவரது தனிப்பட்ட முயற்சியால் சுமார் 11,000 மரங்கள் நடப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 9,000 மரங்கள் இன்றும் உயிருடன் வளர்ந்து வருகின்றன.
ஒரு தனிமனிதனால் இவ்வளவு பெரிய பசுமைப் பணியை முன்னெடுக்க முடியுமென்றால், அரசாங்கமும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் உள்ளூராட்சி மன்றங்களும் இணைந்து செயற்பட்டால் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனவே, கௌரவ உறுப்பினர் லசித் பாஷன கமகே அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணையை நான் முழுமையாக ஆதரிக்கின்றேன்.
வீதி ஓரங்களில் மரங்களை நடுவது மட்டுமன்றி, அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதற்கும், உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதற்கும், தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எமது எதிர்காலச் சந்ததியினருக்கு மரங்களற்ற வீதிகளை அல்ல, பசுமையான வீதிகளையும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் விட்டுச் செல்வதே எமது கடமையாகும்.
இந்தப் பிரேரணைக்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கின்றேன் என தெரிவித்தார்.


