உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகளில் சிறப்பாக செயற்பட்டவர்கள் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
94 பார்வைகள்

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் துறைகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த முடியும் எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உற்பத்தியை அதிகரிப்பதுடன் சந்தை வாய்ப்புகள், நியாயமான கொள்முதல் விலை, சேமிப்பு மற்றும் பெறுமதிசேர் உற்பத்தி ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகளில் சிறப்பாகச் செயற்பட்ட விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் நன்னீர் மீன்பிடிச் சங்கங்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06.11.2026) முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துறைகளில் சாதனை படைத்தவர்களின் உழைப்பையும் புதிய முயற்சிகளையும் பாராட்டிய ஆளுநர், விவசாயிகள் பாரம்பரிய நடைமுறைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், மாறிவரும் தொழில்நுட்பங்களையும் புதிய உற்பத்தி முறைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

விவசாயிகள் ‘ஏழை விவசாயிகள்’ என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு, தமது உழைப்பின் மூலம் கௌரவமான வாழ்க்கையையும் பொருளாதார வலிமையையும் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதே தமது விருப்பம் என்றும் தெரிவித்தார்.

விவசாய உற்பத்தி அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் சந்தை விலை வீழ்ச்சியடைவது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், உற்பத்தியை அதிகரிப்பது மாத்திரம் போதுமானதல்ல, அதற்கேற்ற நிலையான சந்தை, நியாயமான கொள்முதல் விலை, சேமிப்பு வசதிகள், பதப்படுத்தல் மற்றும் பெறுமதிசேர் உற்பத்தி ஆகியவற்றையும் ஒருங்கிணைத்துச் செயற்படுத்த வேண்டும் என்றார்.

விவசாயப் பொருட்கள், பால் உற்பத்திகள் மற்றும் நன்னீர் மீன்களைக் கொள்வனவு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். உற்பத்திப் பொருட்களைப் பதப்படுத்தி, பொதி செய்து, பெறுமதி சேர்த்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் சந்தைப்படுத்துவதற்கான முதலீடுகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மாங்குளத்தில் உருவாக்கப்படவுள்ள முதலீட்டு வலயம் இத்துறைகளுக்கு முக்கிய வாய்ப்பாக அமையும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திகளைப் பெறுமதிசேர் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை அங்கு உருவாக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இதற்காக விவசாயிகளும் பண்ணையாளர்களும் உற்பத்தியின் அளவை அதிகரிப்பதுடன், தரத்தையும் தொடர்ச்சியான விநியோகத்தையும் உறுதிப்படுத்தத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தேசிய பொருளாதாரத்துக்கான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை தற்போதைய 4.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஆளுநர், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் துறைகளை வலுப்படுத்துவதன் மூலம் அந்த இலக்கை அடைவதற்குக் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும் என்றார்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சீரற்ற மழைவீழ்ச்சி, தொடர்ச்சியான வறட்சி மற்றும் வனவிலங்குகளால் பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட சவால்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவற்றை எதிர்கொள்வதற்குக் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பயிர்ச்செய்கை முறைகளைப் பின்பற்றுவதுடன், நவீன தொழில்நுட்பங்களையும் உபகரணங்களையும் பயன்படுத்தி உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும் என்றார். இதற்காக மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஊடாகப் பயிற்சிகளும் நவீன உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான வாயுத்துப்பாக்கிகள் வழங்குதல், யானைவேலிகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் சிறுபோகத்தில் வடக்கு மாகாணம் ஒரு இலட்சத்து 56 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை உற்பத்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், நவீன தொழில்நுட்பப் பயன்பாடு, குளங்களைப் புனரமைத்தல் மற்றும் விளைநிலப் பயன்பாட்டை அதிகரித்தல் ஆகியவை இதற்குப் பங்களித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, ஒவ்வொரு போகத்திலும் நெல் பயிரிடுவதையே ஒரே தெரிவாகக் கருதாமல், சந்தைத் தேவை மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப மாற்றுப் பயிர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த ஏற்றுநீர்ப்பாசனத் திட்டங்களை மீள ஆரம்பித்து, விவசாயிகளின் பங்களிப்புடன் பயனுள்ள வகையில் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில், களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அலுவலர்களின் பங்களிப்பையும் ஆளுநர் விசேடமாகப் பாராட்டினார்.

இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை விரைவாக அடையாளம் கண்டு வழங்கிய விவசாயப் போதனாசிரியர் சிவராம் மற்றும் வவுனியா மாவட்டத்தின் காஞ்சிரமோட்டை பகுதியில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் நாமகள் ஆகிய இருவரையும் ஆளுநர் தனிப்படப் பாராட்டினார். அவர்களின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், இருவருக்கும் ஆளுநர் தமது மெச்சுரைப் பத்திரங்களை வழங்கி கௌரவித்தார்.

அரச அலுவலகத்தில் கடமைகளை நிறைவேற்றுவது அரச சேவையின் ஒரு பகுதியாக இருந்தாலும், மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வுடனும் பொறுப்புடனும் பணியாற்றுவதே அரச சேவையின் உண்மையான பெறுமதி எனக் குறிப்பிட்ட ஆளுநர், விவசாயிகளின் தேவைகளை நேரடியாக அறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தாமதமின்றித் தீர்வு காணும் வகையில் அலுவலர்கள் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதற்கான வழிகாட்டலையும் களப்பணிகளின் ஒருங்கிணைப்பையும் வழங்கிய மாவட்ட மற்றும் மாகாண விவசாயப் பிரிவு அதிகாரிகள், விவசாய அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கும் அவர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் நன்னீர் மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில், விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ தலைமை தாங்கினார். கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் செல்வத்தம்பி திலகநாதன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைபற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், மாகாணப் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள், விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் நன்னீர் மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவான் நியமனம்.!

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை (9) தனது கடமைகளைப்…

80 0 0
இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு; போக்குவரத்து பாதிப்பு.!

இன்று (6) பிற்பகல் வேளையில் பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தடங்கல்கள்…

77 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை.!

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று…

80 0 0
இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம்.!

கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பழைய மாணவிகள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை…

78 0 0