மெல்போர்னிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் வானூர்தி அவசரத் தரையிறக்கம் – விசேட விசாரணை ஆரம்பம்!
மெல்போர்னில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்குச் சொந்தமான UL605 வானூர்தியின் சரக்குப் பெட்டகத்தில் புகை எச்சரிக்கை சமிக்ஞை செயல்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை அறிவித்துள்ளது.
குறித்த வானூர்தியின் சரக்குப் பெட்டகத்தில் (Cargo Hold) புகை எச்சரிக்கை சமிக்ஞை செயல்பட்டதைத் தொடர்ந்து, தரையிறங்குவதற்கு முன்னர் அவசர நிலைமை அறிவிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று (01) இரவு 11.20 மணியளவில் கொழும்பை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்த குறித்த வானூர்தி, அவசர நிலைமை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலைய அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
வானூர்தி தரையிறங்கியபோது, வானூர்தி நிலையத்தின் அவசரகாலப் பிரிவினரும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது, வானூர்தியில் பயணித்த அனைத்து பயணிகளும் வானூர்திப் பணியாளர்களும் எவ்வித பாதிப்புகளுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அனைத்து பயணிகள் மற்றும் வானூர்திப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு எப்போதும் உயர்ந்த முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.


