மட்டக்களப்பிற்கு மக்களின் குறைகளை அறிந்து செயல்படக்கூடிய அரசாங்க அதிபர் தேவை! : சிறிநேசன் எம்.பி வலியுறுத்தல்
மக்களின் குறைகளை அறிந்து செயல்படக்கூடிய ஒரு பொருத்தமான அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவை. ஒருபக்கச்சார்பாக குறிப்பிட்ட தரப்பினருக்கு மாத்திரம் அவர் ஆதரவாக இருப்பது என்பது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு செயல்பாடாக இருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
இப்படிப்பட்டவர்கள் எங்கள் மாவட்டத்தில் பணியாற்றுவதற்குத் தகுதியற்றவராக இருக்கின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களின் போராட்டத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பதற்கு முயற்சிகளை பாராளுமன்ற உறுப்பினர் முன்னெடுத்தபோது அவரை சந்திப்பதற்கு பொலிஸார் அனுமதிக்காத நிலையில் நீண்ட நேரமாக மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்புகொள்ளமுயற்சித்த நிலையில் அவரை தொடர்புகொள்ளமுடியாத நிலையே இருந்தது.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
அரசாங்க அதிபர் அவர்களை இந்த இடத்தில் வந்து மக்களின் கோரிக்கையைப் பெற்றுச் செல்லுமாறு கேட்கப்பட்டது. அவர் வர மறுத்துவிட்டார். அதன்பின்னர் ஏழு பேரை உள்ளே வருமாறு கேட்டார். மீடியா சம்பந்தப்பட்டவர்களைக் கூட நாங்க கதைச்ச இடத்தில் அவர் வருவதாகச் சொல்லிவிட்டு, பின்னர் மறுக்கப்பட்டுவிட்டது.
அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட சந்திப்பதற்கு அவர் தயாராக இல்லாத போல் தெரிகின்றது. ஏனென்றால் நாங்கள் அவருக்குத் தொலைபேசியை எடுக்கின்றபோதும் அவருடைய தொலைபேசியிலிருந்து எங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை.
நான் நினைக்கின்றேன் மட்டக்களப்பில் நான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கின்றபோது, கடந்த காலத்தில் எந்த அதிபராகயிருந்தாலும் இருந்தாலும் மக்களின் கோரிக்கைக்கு அமைவாகச் செவிசாய்த்து, அந்த இடங்களுக்கு வந்து மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அந்த விடயத்தை மற்றவர்களுக்குக் கொடுக்கின்ற ஒரு கலாச்சாரம் காணப்பட்டது.
ஆனால் இப்போது பார்க்கின்றபோது மக்களின் கோரிக்கையைப் பெற்றுக்கொள்வதற்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றது. மக்கள் மத்தியில் வர முடியாது, நுழைவாயிலுக்கு அப்பால் நின்று கூட மக்களின் கோரிக்கையைப் பெறமுடியாத ஒரு நிலையில் காணப்படுகின்றார். அடுத்தது பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்குக்கூட அவர் விருப்பமில்லாத ஒருவராகக் காணப்படுகின்றார்.
அதேவேளை நாங்கள் கதைத்து ஒரு முடிவெடுப்பதற்கும் கூட அவர் அதற்குத் தயாராக இல்லை. ஆகவே இப்படிப்பட்ட ஒரு அரசாங்க அதிபர் நிச்சயமாக இந்த மக்களுக்கு மக்களின் குறைகளை, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் இல்லை. ஆகவே மட்டக்களப்பில் இருக்கின்ற ஒரு கலாச்சாரத்தின் அடிப்படையில் மக்களின் கோரிக்கையை மதிக்காதவர்கள், மக்களுக்காகச் செயல்படாதவர்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது என்ற ஒரு விடயம் இருக்கின்றது. அரசாங்கம் இந்த விடயத்தில் மக்கள் சார்பாகச் செயல்படக்கூடியவர்களை இனங்காண வேண்டும்.
இந்த இடத்தில் நான் சொல்லக்கூடியது மயிலத்தமடு, மாதவனையில் நடந்த சம்பவம் சோமலிங்கம் என்பவர் கடத்தப்பட்டு, கொண்டு சென்று தாக்கப்பட்டிருக்கின்றார். பெண்களும் கூட தாக்கியிருக்கின்றார்கள். எனவே இந்த நியாயமான விடயத்தைக் கேட்பதற்கு அரசாங்க அதிபர் தயாரில்லை என்றால், மக்களின் குறைகளை அவரால் தீர்க்க முடியாது. ஒரு பக்கமாக இருந்து சில வேளைகளில் அத்துமீறி வருகின்றவர்களுக்குச் சார்பாக அவர் செயல்படுவது போன்று இருக்கின்றது.
எனவே இந்தச் செயல்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இப்படியான செயல்பாடு உள்ளவர் இந்த மாவட்டத்தை நிர்வகிப்பதற்குரிய தகுதியை இழந்திருக்கின்றார் என்றுதான் நாங்கள் சொல்ல வேண்டும்.
எனவே நாங்கள் பலமுறை முயற்சித்தும் ஜனநாயக அடிப்படையில் ஒரு அகிம்சை ரீதியாக முயற்சித்தும், அந்த விடயங்களை அவர் ஏற்றுக்கொள்ளாத ஒரு நிலையும், பொலிசாரை வைத்துக்கொண்டு இதனைத் தடுத்து நிறுத்தலாம் என்ற அடிப்படையிலும் அவர் செயல்படுகின்றார்.
ஆகவே நாங்கள் அவரோடு பேசுவதை விடப் பேசாமல் செல்வதுதான் பொருத்தம் என்று நினைக்கின்றோம். பொருத்தமானவர்கள் வந்தால்தான் இனிப் பேசலாம் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் கதைப்பதற்கு அவர் விரும்பவில்லை என்றால் பிறகு என்ன காரியத்தைப் பார் முடிப்பது? பிரச்சினையைப் பார் முடிப்பதற்கு… கதைப்பதற்கே விருப்பமில்லாத ஒரு அரசாங்க அதிபர். நாங்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள். அப்ப எங்களோடு பேசுவதற்கு ஆரம்பத்தில் பேசினார், பின்னர் பேச மறுக்கின்றார்.
ஆகவே நாங்கள் சொல்லக்கூடியது மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய, மக்களின் குறைகளை அறிந்து செயல்படக்கூடிய ஒரு பொருத்தமான அரசாங்க அதிபர் இந்த இடத்திற்குத் தேவை என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஒருபக்கச்சார்பாக குறிப்பிட்ட தரப்பினருக்கு மாத்திரம் அவர் ஆதரவாக இருப்பது என்பது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு செயல்பாடாக இருக்கும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அவர் மீடியாக்களை விரும்பவில்லை, பாராளுமன்ற உறுப்பினர்களை விரும்பவில்லை, தான் விரல் நீட்டுகின்ற குறிப்பிட்டவர்கள் மட்டும் வர வேண்டும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமில்லை.
ஆகவே இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு, இப்படிப்பட்டவர்கள் எங்கள் மாவட்டத்தில் பணியாற்றுவதற்குத் தகுதியற்றவராக இருக்கின்றார் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


