வாக்களித்தவர்களின் கைகளை வெட்டி வேலியில் தொங்கவிட்டவர்களே ஜே.வி.பியினர்!
1987 – 1989 காலப்பகுதியில் சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலைமையை இன்றைய இளைஞர்கள் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அக்காலத்தில் வீட்டில் மின்விளக்கை ஏற்றக்கூடாது என்ற உத்தரவை மீறினால், வீட்டுக்கு வந்து சுட்டுக் கொலை செய்யும் நிலைமை இருந்தது.
மக்கள் தேர்தலுக்குச் சென்று வாக்களிக்கக்கூடாது என்று மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்தபோது, அதனை மீறி வாக்களித்தவர்களின் கைகளை வெட்டிய சம்பவங்களும் இடம்பெற்றன.
அவர்களின் உத்தரவுகளை ஏற்காதவர்களின் கழுத்துகளை வெட்டி வேலிகளில் குத்திவைத்தனர். சந்தி சந்தியாகச் சடலங்கள் காணப்பட்டன.
அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் நன்றாகத் தெரியும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்படுவது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.
கடந்த தேர்தலுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் மக்களின் மனநிலையைத் திரிபுபடுத்துவதற்குத் தனது அமைப்பைப் பயன்படுத்தியது. இன்றும் அந்தச் செயற்பாடு தொடர்கின்றது.
எனவே, எமது கட்சியின் பிரதான செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட கிராம மட்டத்தில் அரசியல் கருத்துகளை முன்வைக்கக்கூடிய தலைவர்களுக்கு நாட்டில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக அறிவூட்டுவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
ஜனநாயக நாடு என்பது மக்களின் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையில் ஆட்சி நடைபெறும் நாடாகும். 30 ஆண்டுகளாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் ஒரு கட்டத்தில் முடிவெடுத்து அவரை ஆட்சியிலிருந்து அகற்றினர். அதுவே ஜனநாயகத்தின் பண்பாகும். மக்கள் தமது விருப்பத்துக்கேற்ப முடிவெடுப்பதற்குச் சுதந்திரமும் உரிமையும் இருக்க வேண்டும். அதற்குச் சட்டத்தின் ஆட்சி அவசியமாகும்.
சட்டத்தின் ஆட்சி இருப்பதால்தான் மக்கள் தங்களையும் தமது குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இளைஞர்கள் அரசியல் முரண்பாடுகளால் வாக்குவாதங்களில் ஈடுபட்டாலும் சட்டம் நடைமுறையில் இருந்தால் அவர்களைப் பாதுகாக்க முடியும்.
அதேபோன்று, தமது மகள்கள் பாதுகாப்பாகக் கல்வி கற்கச் சென்று திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும் பெற்றோருக்கு இருக்கும். சட்டத்தின் ஆட்சி இல்லாமல் போனால் அந்தப் பாதுகாப்பு இல்லாமல் போகும்.
எனவே, நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காகச் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – என்றார்.

