மகாநாயக்க தேரர்களின் தலையீட்டினால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது விகாரமகாதேவி பூங்கா போராட்டம்!
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கடந்த 10 நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த, சிறையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் சத்தியாக்கிரகப் போராட்டம், மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
அரசுடனான பேச்சுகள் மூலம் ஞானசார தேரரின் விடுதலையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மகாநாயக்க தேரர்கள் போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்று உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.
ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பாக உரிய அரச அதிகாரிகளுடன் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் தற்போது உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகாநாயக்க தேரர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற எழுத்துமூல உறுதியளிப்பு மற்றும் கோரிக்கையை மதித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடத் தீர்மானித்தனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம், கொழும்பு மாநகர சபை மற்றும் பொலிஸாரினால் விகாரமகாதேவி பூங்காவில் விதிக்கப்பட்ட பல்வேறு சட்டக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

