அரசைக் கவிழ்க்க மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்தாதீர்!
நாட்டில் தற்போது அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களின் பின்னணியில், சில மதத் தலைவர்கள் தவறான நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றனர் என்று தோட்டக் கட்டமைப்பு மற்றும் சமூக நலன்புரிப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குற்றம் சாட்டினார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும், கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல் மற்றும் அநியாயங்களில் ஈடுபட்டோருக்கு எதிராக முறையான நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத் தீர்ப்புகளின்படி சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள், அந்தத் தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் அரசை வீழ்த்துவதற்காகவும் மதத்தை ஒரு கேடயமாகவும் ஆயுதமாகவும் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சில மதத் தலைவர்களின் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தி, அவர்களைத் தூண்டிவிட்டு கொழும்பில் சிறிய குழுக்களை அமைத்து அரசைக் கவிழ்க்கச் சிலர் பகல் கனவு காண்கின்றனர் என்று குறிப்பிட்ட அவர், நாட்டு மக்களின் முழுமையான ஆதரவு தேசிய மக்கள் சக்திக்கு இருக்கும் வரை இந்த அரசை யாராலும் அசைக்க முடியாது என்று உறுதியளித்தார்.
போராட்டங்களில் ஈடுபடும் சில மதத் தலைவர்கள் இரவு நேரங்களில் எங்கு செல்கின்றார்கள், எங்குத் தங்குகின்றார்கள் என்பது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், இத்தகைய போலிப் போராட்டங்களைக் கண்டு அஞ்சாமல் அரசு தனது இலக்கை நோக்கிச் சரியான பாதையில் பயணிக்கின்றது என்றும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நாடு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

