கொக்குத்தொடுவாய் உப்பளத் திட்டத்தை கைவிடுங்கள்.!
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் முன்மொழியப்பட்ட உப்பளத் திட்டத்தினை கைவிடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
இது தொடர்பாக விவசாயம் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
09.10.2026ஆம் திகதி தங்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தேன். இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான தீர்வொன்றைக் கண்டறியுமாறு தாங்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தீர்கள்.
முன்மொழியப்பட்ட திட்டப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தங்களது காணி உரிமை, விவசாய நடவடிக்கைகள், மீன்பிடித் தொழில் மற்றும் சுற்றியுள்ள இயற்கைச் சூழல் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு இத்திட்டத்திற்கு வலுவான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
நில அளவைத் திணைக்கள தகவல்களின்படி, இத்திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளில் ஏறத்தாள 27 ஏக்கர் தனியார் காணிகளும் 13 ஏக்கர் அரச காணிகளும் சுவீகரிக்கப்படவுள்ளன.
இதன்மூலம் முன்மொழியப்பட்ட திட்டப் பிரதேசத்திற்குள் கணிசமான அளவு தனியார் காணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. இத்திட்டத்தின் நோக்கத்திற்காகத் தனியார் காணிகளைப் பயன்படுத்துதல் அல்லது அவற்றைக் கையகப்படுத்துதல் தொடர்பில் காணி உரிமையாளர்கள் மற்றும் பிரதேச மக்களிடையே கடுமையான ஆட்சேபனை எழுந்துள்ளன.
பாதிக்கப்படக்கூடிய மக்களின் உரிமைகளும் நலன்களும் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் முறையாகக் கருத்திற்கொள்ளப்படாமல் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படக் கூடாது.
மேலும், இம்முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பாக சுற்றியுள்ள பிரதேசங்களின் விவசாய அமைப்புகள் மற்றும் மீனவர் அமைப்புகளிடையே அச்சமான மனோநிலை காணப்படுகின்றது. விவசாயமும் மீன்பிடித் தொழிலும் அந்த பிரதேசத்தில் வாழுகின்ற மக்களின் வருமானத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் இன்றியமையாத ஆதாரங்களாக விளங்குகின்றன. இத்துறைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு திட்டமும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் சமூக ரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அமைப்புகளாலும் பொதுமக்களாலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன், 21.09.2026 அன்று நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இத்திட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதையும் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். இத்தீர்மானத்தைக் கருத்திற்கொண்டு, உள்ளுர் மக்களின் எதிர்ப்புகளையும் குறித்த தீர்மானத்தையும் புறக்கணித்து இத்திட்டம் முன்னெடுக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
எனவே, மக்களின் நலன்களையும் சுற்றியுள்ள சுற்றுச்சூழலையும் கருத்திற்கொண்டு, முன்மொழியப்பட்ட கொக்குத்தொடுவாய் உப்பளத் திட்டத்தை இரத்துச் செய்வதற்குத் தாங்கள் தலையிட்டு சாதகமான தீர்மானமொன்றை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

