கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவது குறித்து பரிசீலனை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை சந்தேகநபராகப் பெயரிடப்படாத நிலையில், அவருக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய விடயம் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு இன்று (21) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பின்னரான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, கோட்டாபய ராஜபக்ச சார்பில் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், அந்த மனுவில் காணப்பட்ட சில குறைபாடுகள் காரணமாக அது நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின்போது, குறித்த மனு தொடர்பில் நீதவான் விசாரித்த நிலையில், சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் கையொப்பத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனு, சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் கிடைத்திருந்ததாக மேலதிக மன்றாடியார் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோட்டாபய ராஜபக்ச இதுவரை குறித்த விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வாய்மொழியாக அறிவித்துள்ளதாகவும், இந்த விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

