செம்மணிப் புதைப்பு ஒரே தருணத்தில் நிகழ்ந்ததல்ல.!
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட நாணயங்கள் தொடர்ச்சியற்ற காலவரிசையைக் காட்டுவதால், இந்தப் புதைப்பானது ஒரே நேரத்தில் நிகழ்ந்த ஒன்றாக இல்லாமல் நீண்டகாலப் பகுதியில் படிப்படியாக நிகழ்ந்த ஒன்றாக இருக்கலாம் என்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான தடயவியல் அறிக்கையைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் சமர்ப்பித்திருந்தார்.
அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:-
சாம்பல் படிவும் மயானத் தகன மேடையும்
செம்மணிப் புதைகுழியின் அகழ்வுப் பகுதி கிழக்கு மற்றும் தென்கிழக்குத் திசைகளில் விரிவுபடுத்தப்பட்டபோது, கணிசமான தடிமனைக் கொண்ட சாம்பல் படிவொன்று கண்டறியப்பட்டது.
இந்தப் பகுதியிலிருந்து தென்கிழக்கே அண்ணளவாக 5 முதல் 6 மீற்றர் தொலைவில் மயானத்தின் தகன மேடை அமைந்துள்ளது. அந்தத் தகன மேடையின் தாங்குச் சுவர் கட்டப்பட்டபோது, புதிய கட்டமைப்பை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த தகனப் பகுதி இடித்துச் சுத்தப்படுத்தப்பட்டுச் சமப்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அந்தச் செயல்பாட்டின் விளைவாக எஞ்சியிருந்த சாம்பல் குவியலே இந்தத் தடிமனான சாம்பல் படிவாகும்.
மீட்கப்பட்ட நாணயங்களும் காலக் குறிப்புகளும்
இந்தச் சாம்பல் படிவத்திலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான நாணயங்கள் மீட்கப்பட்டன. மனித எலும்புக்கூட்டு எச்சங்களுடன் தொடர்புடைய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களுடன் ஒப்பிடுகையில், இங்குக் கிடைத்த நாணயங்கள் ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் பாதுகாக்கப்பட்டிருந்தன.
ஆரம்பகட்டப் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர், குறித்த நாணயங்களில் கி.பி. 1920, 1944, 1963, 1975, 1978, 1982, 1991 மற்றும் 1994 ஆகிய ஆண்டுக் குறிப்புகள் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
தொடர்ச்சியற்ற காலவரிசை
இந்த நாணயங்களின் காலப்பகிர்வு தொடர்ச்சியற்ற காலவரிசையைக் காட்டுகின்றது. அதாவது, பதிவு செய்யப்பட்ட சில நாணயங்களின் அச்சிடப்பட்ட ஆண்டுகளுக்கு இடையில் பாரிய கால இடைவெளிகள் காணப்படுகின்றன.
இதன் அடிப்படையில் நோக்குகையில், இந்நாணயங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்த ஒரு புதைப்பு நிகழ்வின் விளைவாகச் சேராமல், நீண்ட காலப்பகுதியில் படிப்படியாகச் சேர்ந்த பொருட்களாக இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

