அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவில் தொடரும் விரிசல்!
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) ஆகியோருக்கு இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
அமைதிக்காக யுக்ரைன் தொடர்ந்து பாடுபடுவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்த போதிலும், யுக்ரைன் மீதான ட்ரம்பின் சமீபத்திய கடுமையான வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன.
யுக்ரைன் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்றிருந்த வேளையில், ரஷ்யாவிடம் இருந்து டீசலை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டது.
இது யுக்ரைன் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஷ்யா மீது விதிக்கப்படவிருந்த ‘கிரஹாம் சட்ட’ (Graham Act) தடைகளைத் ட்ரம்ப் தற்காலிகமாக இடைநிறுத்தினார்.
இது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவும் என அமெரிக்கா கூறினாலும், யுக்ரைனுக்கு வழங்கப்பட்ட பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பில் வழமையாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை உளவுத் தகவல்கள் மற்றும் ஸ்டார்லிங்க் (Starlink) இணையச் சேவைகள் யுக்ரைனுக்குத் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக யுக்ரைன் குற்றம் சாட்டியது.
ஆனால், இது மென்பொருள் கோளாறு காரணமாக ஏற்பட்ட பிரச்சினை என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறித்து ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன், யுக்ரைனுக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஒஸ்லோ பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப், அடுத்தகட்டமாக புதிய முன்மொழிவுகளுடன் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே, முந்தைய கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, ஏவுகணை எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் ஸ்டார்லிங்க் சேவைகள் மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி யுக்ரைன் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

