தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்து வருவதால், அந்த நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (21) இரவு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீரின் அளவும் அதிகரித்து வருவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, தற்போது நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 3 அடி வீதமும், மேலும் 2 வான் கதவுகள் தலா 2 அடி வீதமும், மேலும் 2 வான் கதவுகள் தலா 1 அடி வீதமும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக விநாடிக்கு 8,400 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் தெதுரு ஓயாவை அண்மித்து வசிக்கும் மக்கள், குறிப்பாக ஆற்றின் நீர்மட்ட மாற்றங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் விடுக்கப்படும் அறிவிப்புகளுக்கு அமைய செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

