பதின்ம வயதினரின் “உளமேம்பாட்டினூடாக வளமான சமூகம்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வூட்டல்!
பதின்ம வயதினரின் உளநலத்தை மேம்படுத்தி, தற்கொலைகள் மற்றும் சிறுவர் வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தரம் 9 மாணவர்களைப் பயனாளிகளாகக் கொண்ட முழுநாள் செயலமர்வொன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வளவாளர்கள் பங்கேற்று மாணவர்களின் உளநலம், மனவலிமை, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான விடயங்களில் வழிகாட்டல்களை வழங்கினர்.
நாடளாவிய ரீதியில் பதின்ம வயதினரின் தற்கொலைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான கவலைகள் அதிகரித்துவரும் சூழலில், மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஆரோக்கியமான முறையில் கையாள்வதற்கான திறன்களை வளர்ப்பதும் இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இளைய தலைமுறையின் உளநலத்தைப் பாதுகாத்து, தன்னம்பிக்கையும் சமூகப் பொறுப்புணர்வும் மிக்க எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதில் இத்தகைய விழிப்புணர்வு முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.











