யாழில் இடைநடுவில் பயணிகளை இறக்கி விட்ட தனியார் சிற்றூர்தி; பயணிகள் சிரமம்.!
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற 751 வழித்தட சிற்றூர்தியானது பயணிகளை சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து சுமார் 500 மீட்டருக்கு அப்பால் இறக்கி விட்டு சென்ற சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் குறித்த வழித்தடத்தில் பயணிக்கின்ற அனைத்து பயணிகள் போக்குவரத்து பேருந்துகளும் சந்நிதி முருகன் ஆலயத்திற்கு முன்பாக சென்று பயணிகளை ஏற்றி – இறக்கி விடுவது வழமையாகும்.
ஆனால் நேற்றையதினம் பருத்தித்துறையிலிருந்து சந்நிதி முருகன் ஆலயம் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் சிற்றூர்தியானது சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பயணிகளை இறக்கிவிட்டமையால் வயது முதிர்ந்தவர்கள் உட்பட பலரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இது தொடர்பில் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.




