சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்; சுகாதார அமைச்சருக்கு பேரவை அவசர கடிதம்.!
இலங்கைச் சுகாதார சேவையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை விதிமுறைகள் தொடர்பில் நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியில், கலாச்சார மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தீர்வு காணுமாறு கோரி தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை சுகாதார அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அண்மைய பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று பேரவையின் ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தொழில்சார் தரநிலைகளையும் நோயாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அதேவேளை, தேவையற்ற இன மற்றும் மத ரீதியான பதற்றங்களைத் தவிர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் சாணக்கியன் எம்.பி. மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்றத்தில் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் விடுத்த அழைப்புக்கு அமைவாக, அவர் அறிவித்த குழுவின் நியமனம், அதன் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய சீருடை விதிமுறைகளை மீளாய்வு செய்வதற்கான காலவரையறை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரியுள்ளோம்.
இந்தப் பிரச்சினையில் நியாயமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வொன்றை எட்டுவதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவுள்ளோம். அதேவேளை, இறுதிச் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளும் முழுப் பொறுப்பும் அரசிடமே உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.” – என்றார்.

